Thursday 18 May 2023

கர்நாடக தேர்தலில்...

'கர்நாடக தேர்தல் ஒளிப்பதிவிற்காக போகலாமா?' என பாலா கேட்டபோது சற்று தயக்கமாகத்தான் இருந்தது. காரணம் பணம் சரியாக வருமா? என்பது தான். தமிழக தேர்தல்களின் போது சந்திக்கும் கசப்பான அனுபவங்கள் தான் அந்த கேள்வியை தூண்டியது. தேர்தல் ஆணையம் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியானது டென்டர் எடுத்த தொழிலதிபரிடம் சென்று அங்கிருந்து அதிகாரிகள், அமைச்சர்கள் முதல் இடைத்தரகர்கள் வரை பலரின் பாக்கெட்டுகளையும் நிரப்பி விட்டு மீதம் இருக்கும் தொகை தான் ஒளிப்பதிவு பணி செய்தவர்களுக்கு கிடைக்கும். இதில் உள்ள அரசியலை தனியாக பேச வேண்டும்.

பாலா மீண்டும் அழைத்து நமக்கான தொகை அதிகம் என்றும் போக்குவரத்துச்செலவு, தங்குமிட வசதிகள் போன்றவற்றை அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்ற கூறவே தயக்கம் குறைந்து போகலாம் என்ற நம்பிக்கை வந்தது. சென்ற வெள்ளிக்கிழமை(28.04.2023) மதியம் 2.30 மணிக்கு கிளம்பி கோபி பேருந்து நிலையம் சென்றோம். அங்கு இருந்த எங்களின் ஏற்பாட்டாளர் மைசூர் சென்று அங்கிருக்கும் ஏற்பாட்டாளாரை சந்தித்து அவரின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கூறினார். நாங்கள் பத்து பேர் கோபியில் இருந்து சத்தியமங்கலத்தை 4.30க்கு அடைந்தோம். அங்கு மைசூர் செல்ல தயாராக இருந்த KSRTC பேருந்தில் ஏறி 8.15'க்கு மைசூரை அடைந்தோம். அங்கிருந்த ஏற்பாட்டாளாரை தொடர்புகொண்ட போது ஹாசன் செல்ல வேண்டும் என்று கூறி எங்களை ஹாசன் செல்லும் பேருந்திற்கு அழைத்துச்சென்றனர். ஏற்கனவே எங்களுக்கு முன்பாகவே வந்திருந்த 20 பேர் அந்த பேருந்தில் இருந்தார்கள். ஹாசன் எவ்வளவு தொலைவு இருக்கும் என  மேப்பில் பார்த்தால் 110 கி.மீ காட்டியது. சரி எப்படியும் மூன்று மணி நேரம் ஆகும் அதுவரை தூங்க வேண்டியது தான் என கண்களை மூடினேன். சிறிது நேரத்திற்கு பின் முன்பக்கம் அமர்ந்திருந்த பாலா அழைத்தான்.

"ஹலோ"

"சொல்லு பாலா"

" மூர்த்தி..என்ன பண்ணற?"

" தூங்கிட்டு வர்றேன்"

"ட்ரைவரும் உன்னை மாதிரியே வர்றார்" என்றதும் தூக்கம் பறந்து போனது.

"என்ன சொல்லற..?"

" ஆமா..எனக்கு வேற பயமா இருக்கு"

"அப்படியே பேச்சு குடுத்துட்டு வா"

"பேச்சு குடுத்தேன். நான் பேசுறது அவருக்கு புரியலை அவர் பேசுறது எனக்கு புரியலை. கொஞ்ச நேரம் கழிச்சு தூங்க ஆரம்பிச்சுடறார்"

" அப்படியே எதாவது ஒன்னு மெயின்டய்ன் பண்ணு"

சரி நடப்பது நடக்கட்டும் என நினைத்துவிட்டு பயணக்களப்பில் தூக்கம் மீண்டும் கண்களை தழுவியது. அவ்வப்போது வேகத்தடைதளில் தூக்கி
போட்டு ட்ரைவர் எழுப்பி விட்டார். ஓர் இடத்தில் திடீரென பிரேக் போடவே அனைவருமே முன்னாள் விழப்போய் ஒரு வழியாக பேலன்ஸ் செய்துகொண்டோம். 
இப்போது மீண்டும் அழைத்த பாலா பின்னால் இடமிருக்கா என கேட்டான். "இங்கு இடமில்லை. 108 எல்லாம் வருமா என தெரியவில்லை. எச்சரிக்கையா உட்கார்ந்துட்டு வா" என்றேன். 

ஒரு வழியாக 11 மணியளளவில் ஒரு மோட்டலில் நிறுத்தினார். ஓட்டுனர், நடத்துனர் இருவருமே சாப்பிட்டனர். கால் மணி நேர இடைவேளைக்கு பின் பேருந்து கிளம்பியது. இப்போது ட்ரைவர் தூக்க கலக்கம் இல்லாமல் ஓட்டினார். பேருந்து சீரான வேகத்தில் தெளிவாக சென்றது. ஹாசனுக்கு 11 கி.மீ முன்னால்  தட தட'வென அடித்துக்கொண்டு பேருந்து நின்றது. மறுபடியும் தூங்கிவிட்டு வண்டியை எங்கோ இடித்து விட்டாரோ என்று பார்த்தால் வண்டியில் ஏதோ கோளாறாம். தேர்தல் ஆணையம் சார்பாக உடனடியாக எங்களுக்கு மாற்று வண்டி வரவழைக்கப்பட்டது. இரவு 11.30 மணிக்கு இரண்டு கார்கள் மற்றும் ஒரு ட்ராவலர் வந்தது. மறக்காமல் எங்களுக்கான உணவையும் எடுத்து வந்திருந்தனர். எங்கள் அனைவரையும் சாப்பிட வைத்த பின்னரே அழைத்துச் சென்றனர்.  எப்போதே ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றிருக்க வேண்டியவர்கள் இப்போது மாற்று வாகனத்தில் சென்றது சற்றே ஆறுதலாக இருந்தது.

ஹாசன் மாவட்டதின் தலைநகர் ஹாசனில் உள்ள ஒரு அலுவலகத்தில் நாங்கள் பயணித்த கார் நுழைந்தது. அங்குள்ள அதிகாரிகள் சக்லேஷ்பூர் அழைத்துச் செல்லுமாறு அவர்களிடம் கூறினர். 30 பேரில் 20 பேர் மட்டும் சக்லேஷ்பூர் அழைத்துச்செல்லப்பட்டோம். மீதம் உள்ள பத்து பேர் எங்களை விட அதிக தொலைவான எதோ ஒரு ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். 

ஹாசனில் இருந்து 40 கி‌மீ தொலைவில் இருக்கும் சக்லேஷ்பூரில் உள்ள சோஷியல் வெல்ஃபேர் அலுவலகத்தில் இரவு 1 மணிக்கு எங்களை இறக்கி விட்டனர்.
அந்த கட்டிடத்தில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டடிருக்கலாம். CRF வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். எங்களை அழைத்து வந்த ஓட்டுனர்கள் அவர்களிடம் எங்களை இங்கு தங்க வைக்க வேண்டும் கூற அந்த துப்பாக்கி ஏந்திய வீர்களோ முடியாது என மறுத்து அருகில் உள்ள  வெல்ஃபேர் ஹாஸ்டலில் தங்கிக்க சொன்னார்கள். நாங்கள் அந்த ஹாஸ்டலுக்குள் சென்ற பின்னரே எங்களை அழைத்து வந்த ஓட்டுனர்கள் கிளம்பிச்சென்றனர். சக்லேஷ்பூர் தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரின் தொடர்பு எண் எங்களுக்கு வழங்கப்பட்டது. இரவு 1.30க்கு தொடர்பு கொண்ட போது காலை 5.45 க்கு தயாராக இருங்கள் உங்களை அழைத்துச்செல்ல வாகனம் வரும் என்றார்.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு ஆம்னி வேன் எங்களை அழைத்துக்கொண்டு 800 மீட்டர் தொலைவில் உள்ள தாலுக்கா அலுவலகத்தில் இறக்கி விட்டது‌. தாலுக்கா அலுவகத்தில் தேர்தல் பணி செய்யும் ஊழியர்கள் தயாராக இருந்தனர். எங்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. பின் 7 மணிக்கு அங்கிருந்த அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.  அடுத்த அறிவிப்பு வரும் வரை ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் இருந்தோம்.

உள்ளூர் புகைப்பட கலைஞர்கள் நான்கு பேரோடு சேர்த்து மொத்தம் 24 ஒளிப்பதிவாளர்கள். பகுதிவாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தேர்தல் பார்வையாளர், ஒரு வாக்குபதிவு பொறுப்பாளர், இரண்டு உதவியாளர்கள், ஒரு காவலர், ஒரு ஒளிப்பதிவாளர் என பிரிக்கப்பட்டு தனித்தனி ஆம்னி வாகனங்களில் கிளம்பிச்சென்றோம். 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் தபால் வாக்குகள் பெறுவதை ஒளிப்பதிவு செய்ய வேண்டும். இது தான் எங்களது பணி. இது முதல் வாக்கு பதிவான போது தான் தெரிந்தது.

சக்லேஷ்பூர் தாலுக்கா மலைப்பகுதி என்பதால் மலைக்கிராமங்களில் சுற்றினோம். வீடுகள் பெரும்பாலும் தனித்தனியாக இருந்தன. பாதையே இல்லாத இடங்களுக்கும் பயணிக்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு வாக்கையும் பல கி.மீ பயணித்து தான் பதிவு செய்தோம். கடைசியாக சென்ற வாக்காளர் வீட்டிற்குச் செல்ல ஒரு கட்டத்திற்கு மேல் ஒத்தையடி பாதை தான் இருந்தது. அதிலும் ஓர் இடத்தில் செங்குத்தான மேடு இருந்தது. எந்த இடமாக இருந்தாலும் எங்களை ட்ரைவர் திறமையாக ஓட்டினார்.

இங்குள்ள ட்ரைவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசுகிறார்கள். மற்றவர்களும் ஓரளவு தமிழை புரிந்துகொள்கிறார்கள். தமிழ் படங்கள் அதிகம் பார்ப்பதும் தமிழ் பாடல்கள் அதிகம் கேட்பதும் காரணமாக இருக்கலாம்‌. ஆங்கிலம் தான் சற்று ஈ
எடுபட வில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லையா அல்லது நாம் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கு புரியவில்லையா என தெரியவில்லை😜. வாக்குப்பதிவு செய்ய சென்ற இடத்தில் ஒரு வீட்டில் எங்களுக்கு சர்பத் கொடுத்தனர். அடுத்த நாள் இன்னொரு வீட்டில் டீ போட்டு கொடுத்தார்கள்.

எங்களுக்கு மொத்தம் 23 வாக்குகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அனைத்தையும் முடிக்க ஞாயிறு மதியம் ஆனது. மதியம் தாலுக்கா அலுவலகம் வந்து ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஃபைல்களை கனினியில் பதிவு செய்து அதை CDயில் காப்பி செய்யும் வேலையை பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் சென்ற போது ஏற்கனவே வந்திருந்த மதிய உணவு தீர்ந்து விட்டது. பின் மீண்டும் வரவழைக்கப்பட்ட எங்கள் குழுவின் தேர்தல் பார்வையாளர் அலைபேசியில் தொடர்பு கொண்டு 'மூர்த்தி சாப்பாடு வந்திடுச்சு. முதல்ல வந்து சாப்பிட்டுக்கோ' என்றார் கன்னடத்தில்.  நான் சரி என சொல்லிவிட்டு வேலையை பாதியில் நிறுத்தி விட்டு செல்ல மனமில்லாமல் என்னுடைய வேலையை தொடர்ந்தேன். சிறிது நேரத்திற்கு பின் அங்கு வந்த அந்த தேர்தல் பார்வையாளர்  சாப்டாச்சா என கேட்டார். இல்ல சார் இப்போ போறேன் என நகர முயன்றேன். சாப்பாடு தீர்ந்திடுச்சு இனி போறது வேஸ்ட் என்றார் சற்று வருத்தத்துடன்.

அவரின் அந்த அக்கறை பிடித்திருந்தது. கர்நாடகத்தில் சந்தித்த வகையில் எளிய மக்கள், ஓட்டுனர்கள் முதல் வட்டாட்சியர் வரை அனைவரும் ஒரு வித அக்கறை உள்ளவர்களாகவும் பழகுவதற்கும், அணுகுவதற்கும் எளிதானவர்களாகவும் இருந்தனர். என்னதான் கர்நாடகம் நமக்கு தண்ணீர் தர மறுத்தாலும் விருந்தோம்பல் பண்புள்ளவர்களாகவே தெரிகின்றனர்.
அப்படி தெரிவதற்கு காரணம் தமிழக சூழல் அதற்கு நேர்மாறாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். 

தமிழக தேர்தல் பணிகளில் யாரும் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். கேட்டால் கூட அனைத்தும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இங்கு பெரும்பாலனவர்கள் தங்களது பாக்கட்டையும் வயிற்றையும் நிரப்புவதிலும் பொழுதை கழிப்பதிலுமே ஆர்வமாக இருப்பார்கள்.

புதிய தலைமுறையில் Vedhavalli Jagadeeshan  சொல்வது போல் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை எல்லாம் அங்கு பார்க்க முடியவில்லை. அதற்கு மாறாக தேர்தலுக்கான சுவடே இல்லாமல் இருந்த சூழலை தான் பார்க்க முடிந்தது. இரண்டு நாள் சக்லேஷ்பூரில் சுற்றியதில் ஒரீரு இடங்களில் JDS கட்சியின் கொடியை தவிர வேறு எந்த கட்சியின் கொடியையும் பார்க்க வில்லை. எந்தக் கட்சியின் பிரச்சாரமும் அங்கு காணவில்லை. ஒரே ஒரு ஊரில் மட்டும் JDS கட்சியினர் கேன்வாஸ் செய்துகொண்டு இருந்தார்கள். தபால் ஓட்டு வாங்கச் சென்ற இடத்தில் கூட ஒருவர் 'இன்னும் கேன்வாஸிங்க்கே யாரும் வரலை அதுக்குள்ள ஓட்டு வந்திடுச்சா' என்றார். 

பல வகைகளில் கர்நாடகம் தமிழ்நாட்டிலிருந்து மாறுபட்டு இருந்தாலும் ஒரு விசயத்தில் மட்டும் பொருந்தி போகிறது. அது ஓட்டுக்கு பணம். இங்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தகவல் வந்தது.
என்ன தான் தேர்தல் ஆணையம் பல சிரத்தைகள் எடுத்து ஒவ்வொரு வாக்கையும் பதிவு செய்ய வைத்தாலும் தங்களது வாக்குகளை ஏதேனும் ஒரு வகையில் வீணடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பணி முடிந்து ஞாயிறு இரவு 8.30 மணிக்கு தேர்தல் பணியில் உள்ள வாகனங்கள் மூலம் எங்களை ஹாசன் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டார்கள். தமிழ்நாடாக இருந்திருந்தால் 'உன்னுடைய வேலை முடிந்து விட்டது. இனி நீ வீட்டுக்கு போனால் என்ன? எங்கு போனால் என்ன?' என நடு ரோட்டில் விட்டிருப்பார்கள். ஹாசனில் 9.30 க்கு இரண்டு பேருந்துகள் புறப்பட தயாராக இருந்தன. ஈரோடு செல்லும் பேருந்து நிரம்பி விட்டதால் மைசூர் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டோம்.

மைசூர் பேருந்து நிலையம் வந்த போது நள்ளிரவு 1 மணி ஆகியிருந்தது. 1.30 க்கு கோவை செல்லும் ஒரு பேருந்தில் இடம் கிடைக்க ஐந்து பேர் மட்டும் அந்த பேருந்தில் ஏறிக்கொண்டோம். மற்றவர்களுக்கு 4 மணிக்கு மேல் தான் பேருந்து கிடைத்தது. நாங்கள் பயணம் செய்த பேருந்து 4.30 மணிக்கு புனஞ்சூர் சோதனை சாவடியில் வந்து நின்றது. ஆறு மணிக்கு பிறகு தான் அனுமதி என்பதால் எங்களுக்கு முன்னால் வந்த வாகனங்களும் அங்கு நின்று கொண்டு இருந்தன. கால் மணிநேரம் முன்னதாகவே 5.45 க்கு வாகனங்கள் அனுமதிக்கப்படன. ஆனால் தமிழ்நாடு எல்லையில் நீக்க வில்லை. பத்து நிமிட காத்திருப்புக்கு பின் சரியாக ஆறு மணிக்கு நீக்கினார்கள். 'இதில் எல்லாம் கரக்டா இருங்க ஆனா பண்ணாரி செக் போஸ்ட்ல மட்டும் நல்லா கல்லா கட்டுங்க' போன்ற முனுமுனுப்புகளை கேட்க முடிந்தது. 

தமிழ்நாடு பார்டரில் இருந்து கிளம்பிய கால் மணிநேரத்தில் நாங்கள் சென்ற பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த இன்னோவா மீது மோதியது. பேருந்தின் ஓட்டுனர் தூங்கி விட்டாரா அல்லது முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டதா என தெரியவில்லை‌. ஆனால் நாங்கள் வந்த பேருந்து அப்போது தான் நல்ல வேகமெடுத்து முன்னால் வந்துகொண்டிருந்த பேருந்துகளை எல்லாம் ஓவர்டேக் செய்து வந்து கொண்டிருந்தது. அந்த காரில் நான்கு பெண்கள் பயணம் செய்திருந்தனர். கேரளாவை சேர்ந்த குடும்பம். நல்வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை‌. காருக்கு மட்டும் பின்பகுதியில் அடி. 

பேருந்து ஓட்டுனர் விபத்து நடந்த அடுத்த நிமிடமே பின்னால் வந்த பேருந்தை நிறுத்தி எங்களை மாற்றி விட்டார்கள். அந்த கேரள குடும்பம் பேருந்து ஓட்டுனரை மலையாளத்தில் திட்டிக்கொண்டு இருந்தார்கள். ஓட்டுனரோ இதெல்லாம் வழக்கமாக நடப்பது தான் என்பது போல் இருந்தார். கர்நாடகா செல்லும்போது விபத்து நடக்கும் என எதிர்பார்த்தோம். அப்படி எதுவும் நடக்காமல் சென்றடைந்தோம். ஆனால் திரும்பும்போது எதிர்பாராமல் நடந்து விட்டது.

ஹாசன் வந்ததுமே அனைவருக்கும் உரிய தொகையை எங்கள் குழுவில் உள்ள ஒருவரின் வங்கி கணக்கிற்கு மொத்தமாக அனுப்பியிருந்தார்கள். ATM'ல் எடுக்கப்பட்ட அந்த தொகை பேருந்தில் வரும்போது அனைவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. நாங்கள் பணம் வாங்குவதை பார்த்த கர்நாடக பயணி ஒருவர் எதற்கு எல்லோருக்கும் பணம் கொடுக்கறாங்க என கேட்டார். ஒரு வேளை ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக நினைத்துக்கொண்டாரோ என்னவோ?
மொத்தத்தில் தமிழகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு கர்நாடகம் எவ்வளவோ மேல் என்பதை இந்த பயணம் உணர்த்தியது.

- மூர்த்தி ஈரோடு

Friday 30 April 2021

கோவிட் டெஸ்ட்

 சென்ற வியாழன்(22.04.2021) திருமண புகைப்பட நிகழ்வு முடிந்து வீட்டிற்கு சென்ற பின் இரவு சளி இருந்தது. கூடவே காய்ச்சலா தலைவலியா எதுவென உணர முடியாத ஒரு உணர்வு இருந்தது. தூக்கம் கெட்டதன் விளைவாக இருக்கலாம் என நினைத்தேன். வெள்ளிக்கிழமை அன்று மண்பானை நீரை குடிக்கும்போது மட்டும் காய்ச்சல் உள்ளது போன்ற உணர்வு ஏற்பட்டது. மற்றபடி வழக்கத்தை விட அதிகமாகவே வேலை செய்தேன்.

வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு பெருந்துறை மார்க்கெட்'க்கு கத்திரிக்காய் கொண்டு சென்ற போது தான் உடல் சற்று வெப்பமாக இருந்ததை உணர முடிந்தது. அப்போது தான் கோவிட் ஆக இருக்குமோ என சிறிதாக சந்தேகம் வந்தது. அப்போதே கோவிட் டெஸ்ட் எடுத்து விடலாம் என முடிவு செய்து கொண்டேன். மறுபுறம் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, இடம் பற்றாக்குறை போன்ற செய்திகள் எல்லாம் கண் முன்னே வந்து சென்றன.

ஏப்ரல் 4 அன்று தான் முதல்முறையாக கோவிட் டெஸ்ட் எடுத்திருந்தேன்‌. அப்போது அறிகுறி எதுவும் இல்லை என்றாலும் தேர்தல் பணிக்காக
டெஸ்ட் எடுக்க வேண்டி இருந்தது. அதுவரை 'டெஸ்ட் எடுக்கும்போது மூக்கில் ஆழமாக டியூப்பை நுழைப்பார்கள். வலி தாங்க முடியாது' என பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஏற்கனவே பரிசோதனை செய்தவர்களிடம் கேட்டபோது அவர்களும் 'மூக்கில் விட்டு தான் டெஸ்ட் எடுப்பார்கள்' என உறுதி செய்தார்கள். திங்களூர் ஜி.ஹச்'சிலயே பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்கிறார்கள். ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெருந்துறை தான் போக வேண்டும் என்றார்கள். விஜயமங்கலம் ஜி.ஹச்சில் மதியம் ஒருமணி வரை டெஸ்ட் எடுப்பார்கள் என 12.30க்கு தகவல் கிடைத்தது. நாங்கள் கிளம்பும்போது மணி 12.30. விஜயமங்கலத்தை அடைந்த போது1.10 ஆகி இருந்தது. திங்களூர் ஜி.ஹச்சில் உறவினர் ஒருவர் பணிபுரிகிறார். அவர் மூலமாக விஜயமங்கலம் ஜி.ஹச்சிற்கு நாங்கள் டெஸ்ட் எடுக்க வருவதாக தகவல் கொடுத்திருந்ததால் தப்பித்தோம். சளியின் மாதிரியை எடுக்கும் உபகரணத்தை மூக்கில் விடும்வரை கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. மூக்கில் விட்ட பிறகு 'அட அதுக்குள்ள முடிந்ததா' என தோன்றியது. எங்கள் உடன் வந்த நண்பன் ஒருவன் மூக்கில் விடும்போது குறு குறுப்பு தாங்காமல் சிரித்ததெல்லாம் வேறு கதை.

பி.சி.ஆர் டெஸ்ட் எடுத்து முடிந்து ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே டெஸ்ட் எடுத்து விட்டதாக குறுஞ்செய்தி வந்தது. மறுநாள் குறுஞ்செய்தியில் ரிசல்ட் வந்துவிடும் என சொல்லியிருந்தார்கள். ஆனால் நெகட்டிவாக இருந்ததனால் அடுத்து எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை.

வியாழக்கிழமை இரவு மார்க்கெட்டிலிருந்து திரும்பும்போது பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சற்று முன்னதாகவே வண்டியை நிறுத்தி மாஸ்க், மாஸ்க் மேல் கட்டியிருந்த கைக்குட்டை ஆகியவற்றை கழட்டி நுகர்வு திறன் வேலை செய்கிறதா என சோதித்து பார்த்தேன். பைக், கோணிப்பை போன்றவற்றை நுகர்ந்து பார்த்தால் ஒரு வாசனையையும் உணர முடியவில்லை.

ஐ.ஆர்.டி.டி மருத்துவமனைக்குள் நுழைந்த போது இரவு எட்டு மணி ஆகியிருந்தது. மெயின் கேட்'டில் இருந்த காவலர்களிடம் இந்த நேரத்தில் கோவிட் டெஸ்ட் எடுக்கின்றார்களா என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றேன். உடலுக்கு என்ன தொந்தரவு என்பதோடு பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை கணினியில் பதிவு செய்துகொண்டு SRF எண்ணுடன் கூடிய டோக்கன் கொடுத்தார்கள். கோவிட் தொற்றஉறுதி செய்யப்பட்டால் ஆம்புலன்ஸ் வர வசதியாக தெளிவான முகவரியை கொடுத்தேன்(!).

எனக்கு முன்னால் ஒருவர் மட்டுமே இருந்தார். மூன்று நிமிட காத்திருப்புக்கு பின் என்னுடைய முறை வந்தது. கை விரலில் பல்ஸ் ஆக்ஸியோ மீட்டர் வைத்து பரிசோதித்தார்கள். SPO2 96% ஆகவும்,   இதய துடிப்பு 94 ஆகவும் இருந்தது. இந்த தகவல்கள் பக்கத்தில் இருந்த மருத்துவரிடம் கொடுக்கப்பட்டது. ஏதோ ஒன்றை பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருந்த மருத்துவர் இரண்டு நிமிடங்கள் கழித்து மூர்த்தி என சத்தமாக கூப்பிட்டார். அருகிலேயே நின்றிருந்த நான் சார் என்றேன்.
'என்ன பண்ணுது' என கேட்டார்.
'சளி இருக்கு, லேசா காய்ச்சல் இருக்கு'என்றேன். மாத்திரைகள் எழுதி கொடுத்துவிட்டு கோவிட் டெஸ்ட் எடுத்துக்கொண்டு கிளம்ப சொன்னார்.

மெடிக்கலில் இருந்தவர் என்னை வட மாநிலத்தவர் என நினைத்துக்கொண்டார் போல. ஒவ்வொரு மாத்திரை அட்டையையும் எடுத்து வைத்து 'இது மார்னிங்' 'இது பிஃபோர் டிஃபன்' என்றார் சத்தமாக.    

மாத்திரைகளை பெற்றுக்கொண்டு
கோவிட் டெஸ்ட் எடுப்பதற்காக காத்திருந்தேன். இப்போது தான் மருத்துவமனைக்கு அடிக்கப்பட்டிருந்த கிருமி நாசியின் வாசனையை உணர முடிந்தது. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. என்னைப்போலவே பலரும் டெஸ்ட் எடுக்க காத்திருந்தனர். அவர்கள் அனைவருமே வெவ்வேறு உடல் கோளாறுகளுக்காக மருத்துவமனைக்கு வந்தவர்கள். கோவிட் டெஸ்ட் எடுத்த பின்புதான் மருத்துவமனையில் அனுமதிப்பார்கள் என்பதால் டெஸ்ட் எடுக்க காத்திருந்தார்கள். அவர்கள் அனைவருமே வயதானவர்கள்.  பெரும்பாலானவர்கள் கை,கால் அல்லது தலை என உடலின் ஏதாவது ஒரு இடத்தில் கட்டுடன் இருந்தார்கள். ஒருவர் நீண்ட நேரமாக நாற்காலியில் உட்கார்ந்திருக்க முடியாமல் மனைவியின் இடுப்பில் சாய்ந்து கொண்டிருந்தார்.

வெளியே ஆம்புலன்ஸ் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து பாதுகாப்பு கவச உடை அணிந்த ஒருவர் இறங்க பின்னாலயே கையில் இரண்டு பேக்குகளை எடுத்துக்கொண்டு ஒருவர் இறங்கினார். அனேகமாக அவர் கோவிட் உறுதி செய்யப்பட்டவராக இருக்கலாம். அவரை பார்க்கும்போது 'நமக்கும் கோவிட் உறுதிசெய்யப்பட்டால் இப்படித்தான் வரவேண்டும்' என நினைத்துக்கொண்டேன்.

கோவிட் டெஸ்ட் எடுக்கும் ஊழியர் ஒவ்வொருவருக்கும் டெஸ்ட் எடுப்பதற்குரிய உபகரனத்தை கொடுத்தார். பாவாயாள் என்ற பெயர் எழுதப்பட்ட குடுவையை மட்டும் பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை. டெஸ்ட் எடுக்க நேரமாகலாம் என நினைத்து அந்த பாவாயாள் கிளம்பியிருக்கலாம். மூன்றாவது நபராக டெஸ்ட் எடுத்துவிட்டு கிளம்பினேன்.

இரண்டு மூன்று நான்கு நாட்களுக்கு எதாவது குறுஞ்செய்தி வருகிறதா என அடிக்கடி மொபைலை எடுத்து பார்த்துக்கொண்டேன். கோவிட் பரிசோதனை முடிவுகளை இணையத்திலேயே தெரிந்துகொள்ளலாம். பரிசோதனையின் போது நமக்கு தரப்படும் எண்ணை வைத்து முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். நான் இணையத்தில் பார்க்க முயற்சி செய்த போதுன் இணையம் இயங்கவில்லை. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவருக்குமே மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பதில்லை. சிரமமாக இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அட்மிட் ஆகலாம். மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை எடுக்குமாறு சுகாதார துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெஸ்ட் எடுத்த பின் என்னுடைய மொபைல் எண்ணிற்கு எந்த குறுஞ்செய்தியும் வராததாலும் எங்கள் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் எதுவும் வராததாலும் எனக்கு கோவிட் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டேன். பரிசோதனை முடிவுகள் வரும் நபர்களில் 5% பேருக்கு கோவில் அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. நல்லவேளையாக அப்படி எந்த அறிகுறிகளும் இல்லை.

Monday 25 January 2021

உணவகங்களை தேடி

  நெடுந்தொலைவு பயணம் செய்பவர்கள் புளிசாதம் செய்து அதை வாழை இலையில் வைத்து வெள்ளைத்துணியில் கட்டி எடுத்துச் செல்வார்கள். இதை கட்டிச்சோறு என்று அழைப்போம். சாதத்தின் சூட்டில் வதங்கி போன வாழை இலையில் சாப்பிடும் சுவையே தனி. வருடத்தில் ஒருநாள் கரூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு போகும்போது கட்டி சோறு சாப்பிடும் வாய்ப்பு அமையும். நாளடைவில் துணியிலிருந்த புளிசாதம் டிஃபன் பாக்ஸ்க்கு மாறியது.

2018'ல் 13 நண்பர்கள் இணைந்து இருசக்கர வாகனங்களில் கடம்பூர் செல்ல திட்டமிட்டிருந்தோம். ஊரில் ஒருவர் எங்களுக்காக புளி சாதம் செய்து கொடுத்தார். வாழை இலையில் பொட்டலங்களாக கட்டி எடுத்துச்சென்று கடம்பூர் வனப்பகுதியில் ஒரு ஓடைக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டோம். சாப்பாடு எடுத்துச் செல்லாமல் போயிருந்தால் வனப்பகுதியில் உணவகங்கள் ஏதும் இல்லாமல் அனைவரும் பட்டினியாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

2014,15 களில் சென்னை செல்லும்போது டிஃபன் பாக்ஸில் புளி சாதம் எடுத்து சென்று சாப்பிட்ட நாட்களும் உண்டு. பின்னர் கடைகளில் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. இன்றைய அவசர உலகில் பயணங்களின் போது சாப்பாடு எடுத்துச்சென்று சாப்பிடும் பழக்கம் குறைந்து விட்டது. ஹோட்டல்கள் பெருகி விட்டாலும் சுவையான தரமான உணவுகள் அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. கிடைக்கும் உணவுக்கு தகுந்த விலை இருப்பதில்லை. அரிதாக சில உணவகங்கள் அமைவதும் உண்டு.

மெரினாவில் உள்ள ஒரு கடையை பற்றி நிறைய யூ டியூப் சானல்களில் போட்டிருந்தார்கள். சென்னை செல்லும்போது அந்த கடையில் சாப்பிட்டு பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். அந்த நாளும் வந்தது. ஒரு மாலை வேளையில் மெரினாவை சுற்றி விட்டு இரவு சாப்பிட அந்த கடையில் சாப்பிட சென்றோம். கடையின் விலை பட்டியல் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் இருந்தது. பகிர்ந்து சாப்பிட கூடுதல் தட்டு கேட்டால் தர மறுத்து விட்டார்கள். ஆளுக்கு ஒரு மீன் மட்டும் சாப்பிட்டு விட்டு இனி இந்த கடை பக்கம் வரவே கூடாது முடிவு செய்துகொண்டு திரும்பினோம்.

புகைப்பட பணிக்காக நாகர்கோவில் சென்றிருந்தோம். கேரளத்தை ஒட்டி இருப்பதால் என்னவோ உணவுகள் கேரளாவின் பக்குவத்தில் இருப்பது போல் இருந்தது. ஹோட்டல் மற்றும் கல்யாண வீட்டில் சாப்பிட்டது அவ்வளவாக சுவையானதாக தெரியவில்லை.  இரண்டு நாட்களாக சாப்பிட்ட உணவுகளால் நாக்கு செத்து போயிருந்தது போல் ஓர் உணர்வு. நாகர்கோவிலிருந்து திரும்பும்போது மதிய உணவை திருப்திகரமாக முடிக்க வேண்டும் என முடிவு செய்தோம். மதுரை பரோட்டோவா, திண்டுக்கல் பிரியாணியா என்ற தேடலில்  விருதுநகரில் எண்ணெய் பரோட்டா சாப்பிடுவது என முடிவானது. காரணம், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கடை எண்ணெய் பரோட்டாவிற்கு புகழ்பெற்றதாக சொல்லியிருந்தார்கள்

விருதுநகரில் புகழ்பெற்ற  அந்த கடைக்குள் நுழைந்தோம். நல்ல பசியுடன் ருசி மறந்த நாவிற்கு எண்ணெய் பரோட்டா + காடை ரெசிப்பி ஆர்டர் செய்தோம். எண்ணெய் பரோட்டா நல்ல சுவை. ஆனால் ஆசைக்கு ஒன்று சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட்டால் வெறுத்து விடுகிறது. அளவான கூட்டணியுடன் சாப்பிட்டால் சுவையை அனுபவிக்கலாம். அந்த கடையில் பிரியாணி கூட நன்றாக இருப்பதாக ரிவ்யூ கொடுத்திருந்தார்கள். விலையும் அளவான விலையாக தான் இருந்தது.

சிறிய அளவில் இருக்கும் ஹோட்டல்களில் சுவை நன்றாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் மோசமானதாக இருக்காது.
2017 நவம்பரில் கொடிவேரி செல்லும் போது குருமந்தூரில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றோம்.
பத்துக்கு பத்து அளவு அறையில் அமைந்திருந்த அந்த மிகச் சிறிய உணவகத்தில் உரிமையாளர் மற்றும் அவர்தம் குடும்பம் சுறுசறுப்பாய் சுற்றிக்கொண்டு இருந்தது, அவர்களின் எட்டு, ஒன்பது வயதில் இருக்கும் அம்மு உட்பட.

சுத்தமான இடம்.  பெரியவர்களிடம் மட்டுமில்லாமல் குழந்தைகளிடமும் 'உனக்கு என்ன வேணுமொ கேளு, தர்றேன்' என தனியாக கவனித்து பரிமாறுகிறார்கள். நாம் இட்லி ஆர்டர் செய்ய, கடைக்காரர் 'குடல் கறி வைக்கட்டுமா' என கேட்டார். சாப்பிடலாமா வேணாமா நாம் முழித்துக்கொண்டிருக்க எதிர் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெரியவர் ' குடல் கறி சாப்பிடுங்க நல்லா இருக்கும்' என பரிந்துரை செய்தார். எந்த ஹோட்டலில் இப்படி சாப்பிட சர்டிபிகேட் கொடுப்பார்கள்? வாங்கி சாப்பிட்டோம். மிக அற்புதமான சுவை. சூடான குடல்கறியுடன் இணையும் இட்லியின் சுவையோ சூப்பர்.வெறும் தள்ளுவண்டி தான் கடையின் சமையலறை. அதில் தான் இட்லியும் தோசையும் சுட்டு தருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் குடல்கறி ஸ்பெஷல். எத்தனை நாட்கள் அந்த ஹோட்டல் செயல்பட்டது என தெரியவில்லை. அடுத்தமுறை அந்த வழியாக சென்றபோது ஹோட்டல் இருந்த இடத்தில் மளிகை கடை செயல்பட்டுக்கொண்டு இருந்தது.

சத்தியமங்கலம், கோட்டு வீராம்பாளையத்தில் ஒரு சைக்கிள் கடை உள்ளது. மாலை நேரத்தில் சைக்கிள் கடையுடன் சிறிய அளவிலான டிஃபன் கடையும் செயல்படுகிறது. இட்லி, தோசை, ஆம்ப்லட், ஆஃபாயில் போன்றவை கிடைக்கின்றன. அத்தனையும் அற்புதமான சுவை. வீட்டு சமையலை போன்ற ஒரு உணர்வை தருகிறது. குறைந்த விலையில் நிறைவாக சாப்பிடலாம்.

கோவை அண்ணா சிலை அருகே தோசைக்கு பெயர் பெற்ற இரவு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் ஒரு கடை மட்டுமே இருந்தது. இப்போது மூன்று கடைகள் செயல்படுகின்றன. மூன்றுமே ஒரே மாதிரியான கடைகள். தள்ளு வண்டியில் தான் கடை வைத்துள்ளார்கள். மெனு லிஸ்ட் வாங்கி பார்த்தால் ஒவ்வொரு பெயரும் வித்தியாசமாக உள்ளது. குடல் கறி தோசை, மட்டன் தோசை, பாகுபலி தோசை, கபாலி தோசை, திரிஷா தோசை என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. சுவையும் நன்றாகவே இருந்தது.

பயணங்களின் போது பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தங்கும் விடுதி பணியாளர்கள், நிறுவன காப்பாளர்கள் போன்றவர்களிடம் பேச்சு கொடுத்தால் நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப அந்த ஊரில் உள்ள முக்கிய உணவகங்களின் பெயர்கள் கிடைத்து விடும். ஈரோடு வாசல் குழுவில் உள்ளவர்கள் இனைந்து ஒரு பட்டியல் தயார் செய்தோம். ஈரோடு மாவட்டத்தில் தரமான சுவையான உணவுகளை வழங்கும் உணவகங்களின் பட்டியல் அது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள சாதாரன தள்ளுவண்டி கடையிலிருந்து உயர்தர ஹோட்டல்கள் வரையிலான பட்டியல் கிடைத்தது. மொத்தமாக 150 கொண்ட இந்த பட்டியலில் வெறும் ஹோட்டல்களை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் உணவு சார்ந்த அனைத்து கடைகளும் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு கடையும் என்னென்ன உணவு வகைக்கு பெயர் பெற்றது போன்ற தகவல்கள் இருந்தது தான் இந்த பட்டியலின் சிறப்பு‌. இது போன்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பட்டியல் கிடைத்தால் மகிழ்ச்சி தான்.

Thursday 31 December 2020

முதல் திரைப்படங்கள்

 #முதல் வி.சி.ஆர் கேசட் திரைப்படம்:

அப்போது எல்லாம் வீட்டிலோ அல்லது ஊரிலோ ஏதாவது விசேஷம் என்றால் திரைப்படங்களை திரையிடுவார்கள். இரவு ஆரம்பித்தால் விடிய விடிய ஓடிக்கொண்டிருக்கும். அப்போது சேட்டிலைட் டிவி'யும், கேபிள் டி.வி'யும் எங்கள் ஊரை எட்டாமல் இருந்தது. திரைப்படங்கள் பார்ப்பதென்றால் எதாவது விஷேசங்கள் வந்தால் தான் உண்டு.

அது 1998,99 காலகட்டமாக இருக்கலாம். அப்போது எங்கள் ஊரில் ஒரு அக்காவிற்கு சடங்கு வைத்திருந்தார்கள். அன்று இரவு அவர்களது வீட்டில் வி.சி.ஆர் கேசட்டில் படம் போட்டார்கள். முதல் படமாக சிம்மராசி திரையிடப்பட்டது. வினித் ஷூ காலுடன் வயலில் இறங்குவது, சரத்குமார் சலங்கை கட்டிக்கொண்டு ஆடுவது போன்ற காட்சிகள் இன்னும் நினைவில் உள்ளது. (அந்த பாடலில் வரும் சலங்கைக்கும் எங்கள் ஊருக்கும் உள்ள தொடர்பு பின்னாளில் தான் தெரிய வந்தது).

வீட்டு வாசலில், வாடகை டேபிளின் மேல் ப்ளேயரையும் டிவி'யையும் வைத்திருந்தார்கள். நாங்கள் கோணிப்பையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம். எவ்வளவு நேரம் படம் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதெல்லாம் நினைவில் இல்லை.

வி.சி.ஆர் கேசட் காலம் முடிந்து CD'க்கள் வந்தது. அதன்பிறகு தொலைக்காட்சி பெட்டிகள் வந்த பிறகு  வீடுகளில் திரைப்படங்கள் போடுவது குறைந்து ஊர் திருவிழாக்கள் போன்ற விஷேசங்களில் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது.

#முதல் 16mm திரை திரைப்படம்:

    ஊரில் திருவிழா என்றால் திரை கட்டி படம் ஒளிபரப்பும் வழக்கம் இன்றும் ஆங்காங்கே உள்ளது. அப்போது அம்மாவின் தாய்மாமா ஊர் கோபி அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கருப்பராயன் கோவில் திருவிழா வந்தது. மே மாதத்தில் பள்ளி முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் தான் திருவிழா வரும். திருவிழாவிற்கு சென்றால் ஒரு வாராமாவது அங்கு தங்கிவிடுவோம். அந்த வருட திருவிழாவின்போது மாரியம்மன் கோவில் வாசலில் வெள்ளை திரை கட்டப்பட்டு தயாராக இருந்தது. ரீல் பெட்டி வந்ததும் ரஜினி நடித்த முரட்டுக்காளை திரைப்படம் திரையிடப்பட்டது. முதல்முறையாக ஒரு திரைப்படத்தை அவ்வளவு பெரிய திரையில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. அதன் பின்னர் எங்கள் ஊரிலும் அம்மாயி ஊரிலும் திரையில் படம் பார்க்கும் வாய்ப்புகள் வந்தது.  'இன்று இரவு எட்டு மணிக்கு சிவாஜி நடித்த  முதல் மரியாதை என்ற திரைப்படமும் விஜயகாந்த் நடித்த கண்ணுப்படப்போகுதய்யா என்ற திரைப்படமும் 16mm அகன்ற வெண் திரையில் திரையிடப்படும்' என்று காலை முதலே மைக் செட்டில் அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும். எட்டு மணிக்கு கோணிப்பை சகிதமாக ஆஜராகி ரீல் பெட்டி வருவதற்காக காத்திருப்போம். ரீல் பெட்டி வந்ததும் முதலில் எந்த திரைப்படம் போடுகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கும். பிடித்த திரைப்படமாக இருந்தால் கைதட்டல்களும் விசில்களும் பறக்கும். படத்தில் வசனங்களுக்கு ஏற்ப பார்வையாளர்களிடமிருந்து - குறிப்பாக குடிமகன்களிடமிருந்து- கமண்ட்டுகள் பறக்கும். அவ்வப்போது 'சத்தம் போடாம படம் பார்கறதுனா பாரு இல்லனா எழுந்து போயிடு' என்று யாராவது அடக்குவார்கள்.ரீல் பெட்டிகள் போய் ப்ரொஜெக்டர் வந்து விட்டது. இப்போது பிடித்த திரைப்படத்தை ஒளிபரப்பலாம். ஆனால் ஒன்றாக சேர்ந்து பார்ப்பதற்கு தான் ஆட்கள் குறைவாக உள்ளார்கள்.

#முதல் டிவி சேனல் திரைப்படம்: 

   அப்போது ஒன்றிரண்டு வீட்டில் மட்டுமே டிவி இருக்கும். அதிலும் பெரும்பாலும் தூர்தர்ஷன் மட்டுமே. சித்தப்பா ஒருவரது  வீட்டில் கலர் டி.வி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அங்கு தான் நாள் போகும். அங்கு முதன்முதலாக பார்த்த திரைப்படம் 1995'ல் வெளிவந்த 'முத்து குளிக்க வாரீயளா'. அப்போதெல்லாம் எந்த படம் போட்டாலும் விடாமல் பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு திரைப்படம் ஒளிபரப்ப படும். 4.00 மணிக்கு சாப்பிட வாங்க என்ற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதில் எப்போது வசந்த குமார் வந்து பரிசு குடுத்து நிகழ்ச்சி முடியும் என பொறுமை இழந்து பார்த்துக்கொண்டிருப்போம். 4.30 மணிக்கு படம் ஆரம்பம் ஆனதும் டைட்டிலில் வரும் பெயர்களை விடாமல் படிப்போம். அந்த பெயர்களை வைத்தே படம் எப்படி இருக்கும் என யூகங்கள் ஓடிககொண்டிருக்கும். கவுண்டமணி செந்தில், வடிவேல் போன்ற நகைச்சுவை நடிகர்கள் பெயர்கள் வந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் சுவாரசியம் இருக்கும். விடுமுறை நாட்களில் மட்டுமே டிவி பார்ப்பதால் எல்லாரும் கொண்டாடும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு ஒருநாள் கூட எனக்கு அமையவில்லை.

தரைவழி ஒளிபரப்புக்கு பின் கேபிள் டிவி வந்தது. ஆனால் அப்போது எங்கள் ஊரில் யாரும் கேபிள் கனக்ஷன் வாங்க வில்லை. அடுத்து டி.டி‌.ஹச் வந்தது. அதன் பின் பெரும்பலனவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் தூர்தஷனின் டி.டி.ஹச் உடனும் தனியார் டி.டி.ஹச் உடனும் தோன்றின. அதன் பின் கேபிள் வந்தது. இப்போது நிமிடத்திற்கு நிமிடம் சேனல் மாற்றி பார்க்கிறோம். ஆனாலும் என்ன ஒளிபரப்பினாலும் அசையாமல் அமர்ந்து தூர்தர்ஷன் பார்த்த காலம் என்றுமே இனிமையானது தான்.

#முதல் மொபைல் திரைப்படம்: 

   அப்போது ஆன்ட்ராய்டு என்ற வார்த்தையை கூட கேள்விப்பட்டதில்லை. வீடியோ எடிட் பண்ணும் வசதியுடன் மொபைல் வேண்டும் என தேடிக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஆன்ட்ராய்டு மொபைல் பற்றி எங்கள் ஊரில் ஒரு அண்ணா சொன்னார். அதன் பிறகே samsung Galaxy மொபைல் வாங்கினேன். அதில் எண்ணற்ற செயலிகளை டவுன்லோட் செய்து மொபைலை தட்டி எடுத்தேன். அதில் தமிழ் படங்கள் பார்ப்பதற்கான செயலி ஒன்று இருந்தது. அந்த செயலியில் முறையான அனுமதியுடன் படத்தை வெளியிடுகின்றார்களா அல்லது திருட்டுத்தனமாக வெளியிடுகின்றார்களா என்பதெல்லாம் தெரியாது. படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்திலயே அந்த செயலியை சிறிது காலம் பயன்படுத்தினேன்  அந்த செயலி மூலம்  2012'ல் வெளியான கலகலப்பு திரைப்படத்தை முதன் முதலாக மொபைலில் பார்த்தேன். அர்த்த ராத்திரியில் வீட்டில் தனி அறையில் வாய் விட்டு சிரித்து பார்த்த படம் அது. ஒரு சில படங்களுக்கு பிறகு அந்த செயலியை உபயோகிக்காமல் திரையரங்குகளில் மட்டும் பார்க்க ஆரம்பித்தேன்.

#முதல் திரையரங்கு திரைப்படம்:

     ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் அனகொன்டா திரைப்படம் திரையிட்டார்கள். கிட்டத்தட்ட தரை டிக்கெட்டில் படம் பார்த்தது போன்ற அனுபவம் அது. அதன் பிறகு ஒருமுறை திங்களூரில் உள்ள தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் நான் அப்போது செல்ல வில்லை.

28.09.2007 பண்ணிரென்டாம் வகுப்பு படிக்கும்போது காலாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருந்தது. நண்பர்கள் சேர்ந்து திரையரங்கிற்கு செல்லலாம் என முந்தைய  நாளே திட்டமிட்டிருந்தோம். வீட்டில் கிளம்பும்போது அம்மாவிடம் திரைப்படத்திற்கு செல்வதாக கூறினேன். அம்மாவோ படம் பார்க்க போவதென்றால் இங்கேயே இருந்து பருத்தி காடு களை எடு என்றார். ஒரு வழியாக சமாளித்து விட்டு கிளம்பி சென்றேன்.பெரியசாமி, சிவக்குமார்,சுரேஷ், மகேஷ் என என்னோட சேர்த்து மொத்தம் 5 பேர் பெருந்துறை மகாலக்ஷ்மி தியேட்டருக்கு சென்றோம். அன்று தான் மலைக்கோட்டை திரைப்படம் வெளியாகி இருந்தது. முதல் நாள் முதல் காட்சி என்ற பரபரப்பெல்லாம் அப்போது இல்லை. ஆனாலும் ஒரு குதூகலம் மட்டும் இருந்தது. முதல்முறையாக தியேட்டரில் பார்த்ததாலோ என்னவோ படம் சீக்கிரம் முடிந்தது போல் இருந்தது. பிரியாமணிக்காகவே படம் இன்னும் சிறிது நேரம் ஓடியிருக்கலாம் என தோன்றியது. அதன் பிறகு கல்லூரி சென்ற பிறகு தான் ஒரே ஒருநாள் கட் அடித்து விட்டு 'திண்டுக்கல் சாரதி' திரைப்படத்தை கோபியில் உள்ள இந்திரா தியேட்டரில் நண்பன் மயில்சாமியுடன் சென்று பார்த்தேன். எத்தனை திரையரங்குகளுக்கு சென்றாலும் முதன்முதலாக சென்ற தியேட்டர் என்பதாலோ என்னவோ பெருந்துறையில் அதிகமாக சென்ற தியேட்டராக மகாலக்ஷ்மி தியேட்டர் தான் உள்ளது.

#முதல் OTT திரைப்படம்:

      OTT தளங்கள் வந்து நீண்ட நாட்கள் ஆகியிருந்தாலும் கொரோனா பொது முடக்கம் தான் OTT தளங்கள் மீது கவனத்தை திருப்பியது. அமேசான் ப்ரைம் மூலமாக முதன்முதலாக ராட்சசி திரைப்படம் பார்த்தேன். ஒரு வருடத்திற்கு முன்பே ராட்சசி திரைப்படம் வெளியே வந்திருந்தாலும்  தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. கோரோனா பொதுமுடக்கம் படம் பார்ப்பதற்கான வாய்ப்பை அமேசான் ப்ரைம் மூலமாக வழங்கியது. நான் பார்க்க தவறவிட்ட பல திரைப்படங்களையும் பார்ப்பதற்கான சூழல் அமைந்ததும் இந்த காலத்தில் தான்.

கலைஞர் தொலைக்காட்சி குறும்படங்களுக்கான வாய்ப்பை உருவாக்கிய பின் ஏராளமான குறும்படங்கள் யூ டியூப் தளத்தில் வெளியாகின. சில வருடங்களில் அது குறைந்து போய் பின் யூ டியூப் தொடர்கள் அதிகம் வெளிவர துவங்கின. தற்போது OTT தளங்கள் இன்னும் பல வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

குறிப்பு: இதுவரை நான் முதன்முதலாக பார்த்ததாக குறிப்பிட்ட திரைப்படங்களை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பு அமையவே இல்லை.

Monday 30 November 2020

சைக்கிள் + சுற்றுலா

 

அடுத்த நாள் காலையில் ரன்னிங் போகலாம் என வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு பூபாலன் அண்ணாவுடனான நான்கு வரி உரையாடலில் தான் முடிவானது. ஆனால் எந்த பாதையில் ஓடுகிறோம் எவ்வளவு நேரம் ஓடுகிறோம் என்பதை எல்லாம் முடிவு செய்யவில்லை. சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு அழைத்தவர் 'இன்னைக்கு நாம சைக்கிளிங் போறோம்'என்றார். கோபியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு ஏரிக்கு செல்வதாக திட்டம். அன்று மாலைதான்  சைக்களிஸ்ட் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த ஏரியை பற்றி சொன்னார். அதை பூபாலன் அண்ண விடம் சொல்லி ஒருநாள் அங்கு போகலாம் என பேசிக்கொண்டு இருந்தோம். ஆனால் அடுத்தநாளே அங்கு போகப்போகிறோம் என தெரியவில்லை. போகும்போது ஒருவர் சைக்கிள் ஓட்ட இன்னொருவர் பைக் ஓட்டவும் திருப்பி வரும்போது மாற்றி ஓட்டிக்கலாம் எனவும் திட்டமிட்டிருந்தோம். போகும்போது நான் தான் ஓட்டுவேன் என துண்டு போட்டார். ஏன் என கேட்டால் 'போகும்போது சரிவான பாதை..திரும்ப வரும்போது மேடாக இருக்கும்' என்கிறார். என்ன ஒரு வில்லத்தனம்....ஆனால் போகும்போது ஜாலியாபோய்விடலாம் என்று இருந்தவரின் எண்ணத்தில் மண் அள்ளி போட காத்திருந்தது அந்த சாலை.

காலை ஆறு மணிக்கு பூபாலன் அண்ணா சைக்கிள் ஓட்ட, நான் ஸ்கூட்டியில் பயணம் ஆனோம். பசுமையும், பனியும் நிரம்பிய பாரியூர் சாலையின் அழகை ரசித்துக்கொண்டே ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அத்தானியை அடைந்தோம். அங்கிருந்து செம்புளிச்சாம்பாளையத்தை அடைந்த பின்புதான் அந்த சாலை எங்களை வரவேற்றது. புதியதாக தார்சாலை அமைப்பதற்காக சாலையை தோண்டி ரோலர் மூலமாக சமன்செய்து வைத்திருந்தார்கள். மண் ஏதும் இல்லாமல் வெறும் கற்கள் மட்டுமே இருந்ததால் சற்று சிரமமாக இருந்தது. சிறிது தொலைவுக்கு மட்டும் தான் இப்படி இருக்கும். போக போக நல்லா இருக்காலம் என்ற நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு அந்த சாலையில் தொடர்ந்தோம். ஆனால் அதில் போக போக தார் சாலை வருவதாகவே தெரியவில்லை. ஒரு கோவிலில் அமர்ந்திருந்த பெரியவரிடம் கேட்டபோது 'இன்னும் ஒரு பர்லாங்க்கு இப்படி இருக்கும்' என்றார். வந்தது வந்தாச்சு என நினைத்துக்கொண்டே கிட்டத்தட்ட 3 கி.மீ தூரம் அந்த மெட்டல் சாலையிலயே பயணம் செய்தோம். ஒரு வழியாக அந்த ஊரை சுற்றிச் செல்லும் தார் சாலை வந்தது. தார் சாலையை அடைந்ததும் 'திரும்பி வர்றப்போ எவ்வளவு தூரம் சுத்தி போனாலும் இந்த ரோட்லயே போயிடலாம்' என்றார் பூபாலன் அண்ணா.

சிறிது நேர பயணத்திற்கு பிறகு மீண்டும் ஒரு மெட்டல் ரோடு. ஆனால் இது கொஞ்சம் தூரம் தான். அதன் பின் சாலை முடிவடைந்தது. அந்த இடத்திலிருந்து மண்பாதை வழியாக ஏரிக்கு செல்ல வேண்டும். அங்கு இருந்தவர்களிடம் கேட்டபோது 'இப்போ போக முடியாதே..மழை பேய்ஞ்சு சேறா இருக்கு...ஆனாலும் போயிடலாம் போங்க' என்று சிறிது தயக்கத்தை எங்களோடு துனைக்கு அனுப்பி வைத்தார்கள். இருபுறமும் தோட்டங்கள் சூழ அந்த பாதை ஆங்காங்கே மட்டுமே சேறும் சகதியுமாக இருந்தது. எனவே எங்களோடு வந்த தயக்கத்தை வந்த வழியிலே துரத்தி அடித்துவிட்டு ஏரியை அடைந்தோம். ஏரி இருந்த இடத்தின் முகப்பில் மின் கம்பி தடுப்பு அமைத்திருந்தார்கள். அருகில் கொழு கொழுவென இருந்த நாய் ஒன்று அதன் எஜமானியினோடு தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது. எங்களை பார்த்ததும் தன் அதிகாரத்தோடு எங்களை பார்த்தது. நாங்கள் சற்று பயம் கலந்த பார்வையோடு நிற்க அந்த பாட்டி அருகில் வந்து எங்களுக்கு பாதுகாப்பு தந்தார். கடிப்பதற்கு தோதாக உள்ளது என பாயந்து விடாதே என நினைத்துக்கொண்டே மெதுவாக நகர்ந்து ஒருவழியாக உள்ளே சென்றோம்.

ஏரி எந்த அமைப்பில் உள்ளது, கரை எங்குள்ளது என்பதை கண்டுபிடிப்பதில் சற்று குழப்பமாக இருந்தது. ஒரு வழியாக ஏரிக்கு செல்லும் வழியை கண்டுபிடித்து ஏரிக்கரையின் மேல் ஏறி பார்த்தோம். ஓரளவிற்கு பெரிய ஏரி...ஏரியின் பின்னணியில் மேகங்கள் மிதக்கும் மலை...மலையின் பின்னணியில் நீல வானம். ஏரிக்குள் நீர் காகங்களின் கூட்டம் ஒன்று நீந்திக்கொண்டு இருந்தது. தூரத்தில் ஒருவர் குளத்தின் மறுபக்கத்தில் ஏதோ செய்துகொண்டிருந்தார். மீன் வலையை விரித்துக்கொண்டு இருப்பது போல் தெரிந்தது. சுற்றிலும் வித விதமாக ஒலித்த பறவைகளின் குரல்கள் குதுகலத்தை தந்தது.
ஏரியின் கரையில் யானையின் சாணம், மானின் கால் தடங்களை பார்க்க முடிந்தது. அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிக்க வரும். இப்போது காடுகளில் ஆங்காங்கே தடுப்பனை அமைக்கப்பட்டு உள்ளதால் யானைகள் அரிதாகவே வந்து செல்கின்றன. ஏரி நிரம்ப தேவையான மழை பெய்யாததால் தண்ணீர் சற்று குறைவாகத்தான் இருந்தது‌. ஆனாலும் காலை நேரத்தில் அந்த சூழல் கண்களுக்கும் மனதிற்கும் இனிமையாக இருந்தது. ஏரி முழுவதுமாக நிரம்பி வழிந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்கவே ரம்மியமாக உள்ளது. அப்படி ஒரு சூழல் அமைந்தால் நிச்சயம் சென்று வரவேண்டும்.
நாங்கள் கிளம்பும்போது அங்கு வந்திருந்த உள்ளூர் மக்கள் சிலர் எங்களை விசாரித்தார்கள். நாங்களும் சில தகவல்களை அவர்களிடம் கேட்டுவிட்டு கிளம்பினோம்.

இப்போது சைக்கிள் ஓட்டுவது என்னுடைய முறை. மண்பாதையில் சிறு சிறு குளங்களாய் தேங்கியிருந்த மழைநீருக்கு இடையே லாவகமாக வளைந்து வளைந்து சென்று தார் சாலையை அடைந்தோம். அந்த மெட்டல் சாலையில் மீண்டும் சிக்காமல் எப்படி செல்வது என அங்கு இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு கிளம்பினோம். போகும்போதே ஓரளவிற்கு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தது. வழியில் போண்டாவும் டீ'யும் சாப்பிட்டுவிட்டு கோபியை அடைந்தோம்.  இதுவரை ஓட்டங்களை மட்டுமே பதிவு செய்துகொண்டிருந்த என்னுடைய  ஸ்ட்ராவா(strava app) செயலில் முதல்முறையாக சைக்கிள் ஓட்டத்தை பதிவு செய்தேன்.

இந்த ஏரியில் கவனித்த மற்றும் ஓர் முக்கியமான அம்சம் ஒரு இடத்தில் கூட பிளாஸ்டிக் கழிவுகளோ உடைத்து நொறுக்கிய மதுபாட்டில்களோ இல்லை. அரசின் பராமரிப்பில் உள்ள இடங்களே பாட்டில்களால் மாசடைந்து இருக்கும்போது அரசின் கவனிப்பு இல்லாமல் இருக்கும் இந்த ஏரி மட்டும் விதிவிலக்காக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் உள்ளூர் மக்களின் கட்டுப்பாடு. ஏரிக்கு யார் யார் வருகிறார்கள், எப்படி வந்து செல்கிறார்கள் என்பதை எல்லாம் அருகில் தோட்டங்களில் உள்ளவர்கள் கவனித்துக்கொண்டே இருக்கின்றார்கள். எந்த ஊரில் இருந்து வருகிறார்கள், என்ன காரணத்திற்காக வருகிறார்கள் என்பதை விசாரித்து வைத்துக் கொள்கிறார்கள். இப்படி உள்ளூர் மக்களின் கண்காணிப்பு உள்ளதால் தான் ஏரியின் சூழல் கெடாமல் உள்ளது. 
ஒவ்வொரு இடத்தையும் அரசு கவனித்துக்கொள்ளட்டும் என இருக்காமல் இந்த மக்களைப்போன்று அக்கறையோடு இருந்தால் இன்னும் பல நன்மைகளை நாம் பெறலாம்.

இன்றைய சூழலில் இயற்கைக்கு நாம் எதாவது செய்ய வேண்டும் என்பதை விட இயற்கையை எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

Monday 14 September 2020

விபத்துகள் பல விதம்

 

இந்தியாவில் அதிக அளவில் சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் மூன்று இடங்களுக்குள்ளாகவே வந்து விடுகிறது. விபத்துகளுக்கு காரணம் அதி வேகம், கவனமின்மை, வாகன கோளாறுகள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சில நேரங்களில் அரசும் விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

நசியனூர் அருகே உள்ள மலைப்பாளையும் என்னும் ஊர் அருகே அடிக்கடி விபத்து நடந்துகொண்டிருந்தது. இதற்கு தீர்வு காணும் விதமாக  இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்ட பின் அங்கு நடக்கும்  விபத்துகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமானது. காரணம் வேகத்தடைகள் இருப்பது வாகனங்களில் வருபவர்களுக்கு தெரிவதில்லை. வேகத்தடை உள்ளது என்பதை எச்சரிக்கும் விதமான அறிவிப்புகள் எதுவும் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால் எதிர்பாரா விதமாக திடீரென வேகத்தடையில் ஏறும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகின. விபத்துகளை தடுப்பதற்காக அரசு எடுத்த நடவெடிக்கையே விபத்து அதிகரிக்க காரணமாக அமைந்து விட்டது.

(கூடுதல் தகவல்: இதை குறிப்பிட்டு புகைப்படத்துடன் பேஸ்புக்கில் எழுதியிருந்தேன். எங்கள் பகுதியை சேர்ந்த தம்பி ஒருவர் அந்த பதிவை படித்துவிட்டு லைக் எல்லாம் போட்டிருந்தார். சில நாட்கள் கழித்து அதே தம்பி அதே வேகத்தடையில் விபத்தில் சிக்கினார்)

4.9.2020  இரவு 9 மணி. மகேஷ் உடன் பைக்கில் பெருந்துறை ரோட்டில் திங்களூரை நெருங்கியிருந்தோம். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிப்பதற்காக பல இடங்களில் சாலைகளை தோண்டி வைத்திருக்கிறார்கள். குழிகள் இருந்த இடத்தில் எல்லாம் டிவைடர் என்று சொல்லப்படும் தடுப்புகள் வைத்து சாலையின் ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் வருவதற்கும் போவதற்கும் வழி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

ஒரு குழியை கடந்த போது எதிர்ப்புறம் டி.வி.எஸ் 50 ஒன்று எங்களை எதிர்கொண்டு சென்றது. அந்த இடத்தில் வலதுபுறமாக உள்ள வழியில் தான் செல்ல வேண்டும் ‌ஆனால் டி.வி.எஸ்.50 இடதுபுறமாக சென்றதால் ஏதோ ஆபத்து நேரப்போகிறது என நினைத்துக்கொண்டே திரும்பி பார்ப்பதற்குள் அந்த வண்டியை காணவில்லை. சாலையில் கொட்டி வைத்திருக்கும் மண் மீதோ கற்கள் மீதோ மோதி விழுந்திருப்பார் என நினைத்துக்கொண்டே வண்டியை திருப்பிக்கொண்டு வந்தோம்.

ஐந்து அடிக்கும் மேல் ஆழமுள்ள குழிக்குள் இருந்து எழுந்து நின்றார் விபத்தில் சிக்கியவர். டி.வி.எஸ்.50 குழிக்குள் தலைகீழாக தொங்கிக்கொண்டு இருப்பது போல் கிடந்தது. மொபைல் டார்ச் உதவியுடன் அருகே சென்று பார்த்தோம். 'அடி பட்டிடுச்சுங்களா ' என மகேஷ் கேட்டேன். 'அடி எல்லாம் இல்ல..கை தான் வீங்கிடுச்சு..செல்போன் எங்க விழந்துச்சுனு தெரியலை..லைட்ட பிடிங்க தேடலாம்' என்றார் அவர். அவரின் நெற்றி மற்றும் கைகளில் சிராய்ப்புகள் இருந்தது டார்ச் வெளிச்சத்தில் தெரிந்தது. அதற்குள் பக்கத்தில் இருந்த ஒரு அக்கா ஓடி வந்து பார்த்தார். விபத்து நடந்திருப்பதை அறிந்து 'அந்த பக்கம் பசங்க இருப்பாங்க கூப்பிடுங்கப்பா' என்றார். நாமே சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் அவரின் மொபைலை தேடும் படலத்தில் இறங்கினோம். குழிக்குள் இருந்தவரிடம் மொபைல் நம்பரை கேட்டு மகேஷ் அழைக்க நான் குழிக்குள் குதித்து மொபைல் ஒலிக்கும் இடத்தை தேடினேன். சத்தம் மட்டும் கேட்டதே தவிர மொபைல் பார்வைக்கு கிடைக்கவில்லை. தவழ்ந்து கொண்டே தேடும்போது ஒரு இடத்தில் சத்தம் அதிகமாக கேட்டது. மண்ணை கிளறி பார்த்தால் உள்ள ஒலித்துக் கொண்டு இருந்தது. மண்ணுக்கு உள்ளேயும் வேலை செய்யும் அளவுக்கு திறன் வாய்ந்த அந்த போன் என்ன கம்பனி என்பதை கவனிக்க மற்ந்து விட்டேன். தோற்றத்தை பார்த்தால் ஜியோ போன் மாதிரி தெரிந்தது.

அவரை மேலே ஏறச்சொல்லி விட்டு டி.வி.எஸ் 50'ஐ மேலே கொண்டு வந்தோம். அதற்குள் இன்னும் சிலர் வந்து சேர்ந்தனர். அதில் ஒன்றிரண்டு பேர் அவருக்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். அதில் "சிலர் வண்டி இந்த பக்கமா வந்ததை பார்த்தோம்..விழுந்தது தெரியல" " லாரிக்காரன் ஏறி வந்துட்டான்" " இவங்க ரெண்டு பேரும் திரும்பி வந்ததனால தான் இவரு விழுந்தது தெரிஞ்சுது" என்று பலவாறு பேசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவர் சொன்னது தான் சிரிப்பை அடக்க முடியவில்லை‌. எங்களை பார்த்து அவர் சொன்னார் " நீங்க ரெண்டு பேரும் அந்த லாரியை பிடிச்சுட்டீங்கனு நினைச்சேன்" என்றார். ஆரம்பத்தில் என்னவென்று விளங்கவில்லை. பின்பு யோசித்து பார்க்கும் போது தான் புரிந்தது. வண்டியை திருப்பிக்கொண்டு இருக்கும் போது லாரி ஒன்று வேகத்தை குறைத்துக் கொண்டே எங்களை கடந்தது. நானோ லாரி சீக்கிரம் சென்று விட்டால் நம் வண்டியை எளிதாக திருப்பி விடலாம் என நினைத்துக்கொண்டு இருந்தேன். உண்மையில் லாரிக்கும் விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  அடிபட்டவர் இன்னும் ஒரு படி மேலே போய் "லாரிக்காரன் அனைச்சு உட்டுட்டு போயிட்டான்..வந்து கூட்டிட்டு போ" என யாருக்கோ போன் செய்து அழைத்துக்கொண்டு இருந்தார்.

குழி பறித்தவர்கள் தகுந்த தடுப்புகளை சரியாக அமைக்காததே விபத்துக்கு காரணம். இந்த குழிகளால் இதுவரை திங்களூரில் மட்டும் எட்டு விபத்துகள் நடந்துள்ளன. அதில் கையில் அடிபட்ட காவலரும் ஒருவர்.  என்னதான் தன் மீது தவறு இருந்தாலும் அந்த தவறை தான் செய்ததாக ஒத்துக்கொள்ள சிலநேரங்களில் சிலருக்கு மனம் வருவதில்லை.

22.10.2019 இரவு பத்து மணி. நண்பன் பிரதீப் உடன் நசியனூரை தாண்டி வந்துகொண்டிருந்தோம். ஓரீடத்தில் நான்கைந்து பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பிரதீப் வண்டியை நிறுத்தி 'என்னாச்சுங்ண்ணா' என கேட்டான். 'அவங்க எதோ பேசிட்டு இருக்கற மாதிரி தெரியுது..இதுக்கு எதுக்கு வண்டிய நிறுத்தி கேட்கிறான்' என நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். பின்பு தான் விசயம் தெரிந்தது. ஒருவர் வண்டியை ரோட்டில் நிறுத்தி ஆப் செய்துவிட்டு போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அந்த வழியே பைக்கில் வந்தவர் கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த வண்டியின் மீது மோதி விழுந்துவிட்டார். விழுந்தவருக்கு கை கால்களில் ஊமை காயங்கள் ஏற்பட்டு வலியுடன் இருந்தார். நல்லவேளையாக ஹெல்மெட் போட்டிருந்தார். ஹெல்மெட் போடாமல் இருந்திருந்தால் தலையில் அடிபட்டு விபரீதம் நேர்ந்திருக்க கூடும். செல்போனில் பேசிக்கொண்டு இருந்தவருக்கு எதுவும் ஆகவில்லை. அவர் உடனே வண்டியை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

நாங்கள் விசாரித்ததில் அடிபட்டவர் எங்கள் பகுதியை சார்ந்தவர் என தெரிந்தது. அவர் வண்டி ஓட்டுவது சிரமம் என்பதால் எங்களில் ஒருவர் அவரை பின்னால் உட்கார வைத்து வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தோம்.
திங்களூர் வந்தடைந்த போது இரவு 10.30 ஆகியிருந்தது. மருத்துவமனைக்கு சென்று முதலுதவி எடுத்துகொண்டால் நன்றாக இருக்குமென ஒரு தனியார் க்ளினிக் சென்றோம். அங்கு யாருமில்லை.  'ஜி.ஹச் போலாம்..அங்க டாக்டர் இருப்பாங்க' என்றான் பிரதீப். இந்த நேரத்தில் சிகிச்சை செய்ய ஆட்கள் இருப்பார்களா என்ற சந்தேகத்தில் தான் அரசு மருத்துவமனையின் கதவை தட்டினோம். ஆனால் அந்த நேரத்திலும் அங்கிருந்த செவிலியரும் மருத்துவரும் அக்கறையுடன் முதலுதவி செய்தார்கள்.  அடிபட்டவருக்கு 53 வயது ஆகின்றது. ஈரோட்டில் உள்ள கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இப்போது தான் முதல் முறையாக அரசு மருத்துவமனைக்கு வருகிறார் என்பது அவரது செய்கைகள் உணர்த்தின. நோயாளிகள் பதிவேட்டில் பதிவு செய்வதற்காக மருத்துவர் தகவல்கள் கேட்ட போது எதுவும் தெரியாமல் திறுதிறுவென முழித்தோம். பின் ஓடிச்சென்று அடிபட்டவரிடம் ஒவ்வொரு தகவலாக கேட்டுக்கொண்டு வந்து மருத்துவரிடம் சொல்லி பதிவு செய்தோம். கிளம்பும்போது 'இருங்க பணம் கொடுத்துட்டு வரேன்' என பர்ஸில் இருந்து நூறு ரூபாயை எடுத்து செவிலியரிடம் நீட்டினார். 'அதெல்லாம் ஒன்னும் வேணாம். உங்களுக்கு நல்லா ஆனா அதுவே போதும்' என மறுத்துவிட்டார் அந்த செவிலியர்.
அரசு மருத்துவமனைகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. நாம் தான் சரியாக பயன்படுத்துவதில்லையோ என்றுதான் தோன்றுகிறது.

ஒவ்வொரு விபத்தும் ஏதோ ஒரு தகவலையோ பாடத்தையோ உணர்த்திச் செல்கிறது.

Tuesday 16 June 2020

செவிலிய பெண்கள்

இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமே உணர்ந்திருந்த செவிலியர்களின் சேவைகளை இப்போது பெரும்பாலான மக்களுக்கு உணர வைத்துள்ளது கொரோனா. கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டவர்கள் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்ததில் செவிலியர்களுக்கு மிகப்பெரும் பங்கு இருப்பதை சாமானியர் முதல் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை நெகிழ்ச்சியுடன் புகழ்ந்த திலிருந்து தெரிந்து கொள்ளலாம். பெண்களே பெரும்பாண்மை யாக இருக்கும் செவிலியர் துறையில் ஆண்களும் செவிலியர்களாக தங்களது பணியை சிறப்பாக செய்ததையும் பத்திரிகை வாயிலாக படிக்க நேர்ந்தது. 

பெண்கள் இட ஒதுக்கீடு வேண்டி கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஆண்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என செவிலியர் படிப்புக்காக கோரப் பட்டது. 1989'ம் ஆண்டு முதல் 10 பெண்களுக்கு ஒரு ஆண் என்ற விகிதத்தில் செவிலியர் படிப்பில் ஆண்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீடு 2008'ம் ஆண்டு வரை மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பின் அரசு கல்லூரிகளில் ஆண்களுக்கான இட ஒதுக்கீடு இல்லை. தனியார் கல்லூரிகளில் மட்டுமே ஆண்கள் செவிலியர் படிப்பை படித்து வருகிறார்கள். இருபது வருடங்களில் அரசு கல்லூரிகளில் செவிலியர் படிப்பை முடித்து வந்தவர்கள் தான் தற்போது அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாய் பணிபுரிந்து வருகிறார்கள்.

மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் ஜீன்களை ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக கொடுத்துள்ளது இயற்கை. அதனால் தான் என்னவோ செவிலியர் துறையில் பெண்களே அதிகம் திறம்பட செயலாற்றி வருகிறார்கள். செவிலியர்களில் மட்டுமல்லாது நமது அன்றாட வாழ்விலயே பெண்களின்அக்கறையை நாள்தோறும் பார்த்து வருகிறோம். சீருடை அணியாத செவிலியர்களாய் நமது ஊர்களில், நமது தெருக்களில், நமது இல்லங்களில் வசித்து வருகிறார்கள். நமது அப்பா அம்மா பிறக்கும் வரை பரம்பரை பரம்பரையாக பிரசவம் பார்த்த பாட்டிகள்கூட மருத்துவர்கள்/செவிலியர்கள் தான். இப்போதும் குடும்பத்தில் யாருக்கு உடல்நலம் சரியில்லை என்றாலும் அம்மாக்கள் தான் செவிலியராக செயல்படுகின்றனர். 

2009'ல் வேதாரண்யத்தில் குளத்தில் வேன் மூழ்கிய ஏற்பட்ட விபத்தில் 11 குழந்தைகளை காப்பாற்றி விட்டு 12'வது குழந்தையை காப்பாற்ற முயற்சித்தபோது தன் உயிரை விட்ட ஆசிரியை சுகந்தி முதல் சமீபத்தில் ஹரியானாவில் இருந்து பீகார் வரை 1200 கி. மீ தூரம் தனது தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த ஜோதி குமாரி வரை பல பெண்கள் மற்றவர்கள் மீது காட்டும் அக்கறைக்கும் அர்பணிப்புக்கும் உதாரணங்களாக விளங்குகின்றனர். 

மூன்றாவது கொரோனா ஊரடங்கிலிருந்து நமது மாவட்டத்திற்கு தளர்வு வழங்கப்பட்ட சமயத்தில் ஒரு திருமண விழா ஒளிப்பதிவுக்கு செல்ல வேண்டி இருந்தது. பெருந்துறையிலிருந்து ஈரோடு சாலையில் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வாய்க்கால் மேடு பகுதியில் பாலம் வேலை நடைபெற்று கொண்டிருந்ததால் சாலையின் ஒரு புறத்தில் காவல்துறை தடுப்பு வைத்திருந்தனர். பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் அந்த தடுப்பில் மோதி கீழே விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி விட்டுக் கொண்டிருந்தனர். நான் அந்த இடத்தை நெருங்கும் போது சாலையில் மறுபுறத்தில் இருந்த நடுத்தர வயது பெண் ஒருவர் ஓடி வந்து அடிபட்டவரை  பார்த்தார். கூட்டம் சேர்ந்து கொண்டிருந்ததால் வண்டியின் வேகத்தை குறைத்து மாத்திரத்திலேயே முன்னே செல்ல முற்பட்டேன். அப்போது அந்த பெண் 'தண்ணி குடுத்தா ஆகுமே.. நான் போய் எடுத்துட்டு வரேன்' என சொல்லிவிட்டு உடனே அந்த இடத்திலிருந்து சாலையை கடக்க முயற்சித்தார். அவரைப் பார்த்ததும் நான் வண்டியை நிறுத்தி அவருக்கு வழி விட்டு 'நீங்க போங்க' என்பது போல் தலையசைத்தேன். அங்கு இருந்தவர்களில் அந்த பெண்ணின் முகத்தில் மட்டுமே உயிரை காப்பாற்ற போராடும் மருத்துவரின் பதட்டம் தெரிந்தது. அதை அடிபட்டவர் கவனித்திருப்பாரா என தெரியவில்லை. 

உறவினர் குடும்பம் ஒன்று தொலை தூரத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு பெண் மட்டுமே. அவரை எங்களுக்கு பக்கத்து மாவட்டத்தில் தான் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். மகளின் திருமணத்திற்கு பிறகு அப்பா அம்மா மட்டும் தனியாக வசித்து வருகிறார்கள். மகள் எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல் அவர்கள் ஊரிலயே வசித்து வந்தார்கள். 

அப்போது கொரோனா கேரளாவில் நுழைந்த சமயம் அது. சமையலறையில் காஃபி போட சென்ற அப்பா தரை வழுக்கி கீழே விழுந்து விட்டார். அப்பா அம்மா இருவருமே வயதானவர்கள். வயது முதிர்ச்சியின் காரணமாக அம்மாவால் எந்த வேலையும் செய்ய முடியாது. கீழே விழுந்த அப்பாவை தூக்கி விடக்கூட முடியாத நிலை. எப்படியோ ஒருவழியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். 

உடனிருந்த உதவ யாரும் இல்லை. இங்கிருந்து அடுத்த நாள் காலையில் அவர்களின் மகள் கிளம்ப இருந்தார்.  அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் எனக்கு தகவல் கிடைத்தது. அடுத்த நாள் அவரோடு நானும் உதவிக்கு செல்ல முடிவு செய்யப்பட்டு அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்கு கிளம்பும் திட்டத்துடன் உறங்கச் சென்றேன்.

அடுத்த நாள் காலையில் மூன்று மணிக்கு வீட்டிலிருந்து கிளம்ப தயாரான போது அந்த பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது. " நீ இங்கயே இரு..அண்ணா ஒருத்தர் ஹெல்புக்கு வரார். தேவைப்பட்டா கூப்பிடறேன்" என்றார். அனேகமாக என்னை சிரமப்படுத்த  வேண்டாம் என நினைத்து அவர் அப்படி பொய் சொல்லியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இப்போது வரை அது உண்மையா இல்லையா என்று அவரிடம் கேட்கவில்லை. 

அப்பாவிற்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒருவாரம் உறக்கமில்லாமல் அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டிற்கு திரும்பிய பின் நான் பார்க்க சென்றிருந்தேன். மிகவும் சோர்வடைந்ததால் அன்று மட்டும் தற்காலிகமாக செவிலியர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தனர். அப்பாவால் சரியாக பேச முடியாது என்பதால் அவரது மகள் மட்டுமே என்ன தேவை என்பதை அப்பாவிடம் கேட்டறிய முடிந்தது. இதனால் இரண்டு நாள் கழித்து செவிலியரை நிறுத்தி விட்டு அவர்களது மகளே கவனித்து வந்தார். 

இடுப்பில் அறுவை சிகிச்சை செய்திருந்தததால் அப்பாவால் உட்கார கூட முடியாது. ஒரே மாதிரி படுத்துக் கொண்டே இருக்க முடியாமல் அப்பா தனது கையை ஊன்றி அவ்வப்போது கட்டிலின் ஓரத்திற்கு நகர்ந்து வந்து விடுவார். நான் சென்றிருந்த நாளுக்கு முந்தைய இரவு கட்டிலின் அருகில் ஒரு நாற்காலியை வைத்து அதன் அருகிலேயே விடிய விடிய தூங்காமல் அமர்ந்துகொண்டு இருந்துள்ளார். அடுத்த நாள் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து கட்டிலயே தடுப்பு ஒன்றை பொருத்தியிருந்தார்கள். 

அப்பாவை ஒரு குழந்தையை போல் பார்த்துக்கொண்டிருந்தார் மகள். இயற்கை உபாதைகள் பிரச்சினைகளுக்காக டயபர் மாட்டியிருந்தார்கள். டயபரை அப்பாவின் இடுப்பில் பொருத்துவதே சவாலான வேலை தான். உபாதைகள் கழித்து விட்டால் அப்பா சைகை செய்வார். மகள் அதை புரிந்துகொண்டு சுத்தம் செய்து விடுவார். 

இதையெல்லாம் ஆச்சரியத்தோடு தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அத்தனை சிரமங்களுக்கு மத்தியில் ஒரு நொடி கூட அவர் அப்பாவிடம் முகம் சுளிக்கவோ கோவப்படவோ இல்லாமல் அன்பாகவே பேசிக்கொண்டு இருந்தார். அவரது இடத்தில் அவர்களுக்கு மகன் இருந்திருந்தால் அவரைப்போன்றே இந்த அளவிற்கு கவனித்திருப்பாரா என்ற கேள்வி அவ்வப்போது வந்து சென்றது. அவரது பிரச்சினைகளுக்கு நடுவிலும் நான் பத்திரமாக வீட்டிற்கு பயணிப்பதை நள்ளிரவு 12 மணி வரை போனில் உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தார். அவரது அன்பையும் அக்கறையையும் அருகில் இருந்து வியந்து பார்த்த அந்த நாளை என்றும் மறக்க முடியாது. 

இப்போது கணவரது வீட்டில் தான் உள்ளார். இப்போது உடல்நலம் சரியில்லாத தனது மாமியாரை கவனித்து வருகிறார். பிளாரன்ஸ் நைட்டிங்கேல்'களுக்கு (Florence Nightingale) ய்வேது?